dmk down 1726557690

அண்ணா திமுகவுக்கு வைத்த பெயர் DPF.. இது எப்படி DMK ஆனது? மாற்றியது யார்?

அண்ணாதுரை திமுகவுக்கு ஆங்கிலத்தில் வைத்த பெயர் என்ன தெரியுமா? அந்தப் பெயர் எப்படி மாறியது என்பது தெரியுமா? இன்றைக்கு உள்ள திமுகவினருக்கே இந்த வரலாறு தெரியுமா என்பது சந்தேகம்தான்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை சுருக்கி திமுக என்று பலரும் இன்று பயன்படுத்தி வருகின்றன. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை டிஎம்கே என்று ஆங்கிலத்தில் சுருக்கி முதன் முதலாகப் பயன்படுத்தியவர் அக்கட்சியின் நிறுவனர் அண்ணாதுரை இல்லை என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அப்படி என்றால் திமுகவை டிஎம்கே என ஆங்கிலத்தில் முதன்முதலாகச் சுருக்கி அழைத்தவர் யார்? இது எப்போது நடந்தது? இப்படியான பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு விடையை அறிந்து கொள்ள நாம் சுமார் 75 ஆண்டுகள் பின்னால் போக வேண்டும்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த அண்ணாதுரை தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். அதற்கு என்ன பெயர் வைப்பது என்று பல குழப்பங்கள் இருந்தன. அவர் தனது தம்பிகளான, இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று பிற்காலத்தில் திமுகவினரால் கருதப்பட்ட நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி நடராசன், ஈவெகி சம்பத், கருணாநிதி ஆகியோரிடம் கலந்தாலோசித்தார்.

அவர்கள் கட்சிக்குப் பலவிதமான பெயர்களைச் சுட்டிக் காட்டினர். அன்று என்ன நடந்தது? திமுக என்ற பெயர் எப்படி உருவானது? அதை ஆங்கிலத்தில் டிஎம்கே எனச் சுருக்கியவர் யார் எனப் பல சந்தேகங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராம அரங்கண்ணல் அவரது சுயசரிதையில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

அவரது நூலில், “கட்சி ஆரம்பிக்கின்ற சூழ்நிலை வந்தாச்சு, அதுதானே உங்கள் எண்ணம்? அரங்கண்ணல், பேட் ஐ கொண்டுவா. கட்சிக்கு ஒரு பெயர் சொல்லுங்கப்பா” என்றா அண்ணா. அங்கே அமர்ந்திருந்த வேலாயுதம் என்ன வாணன், உடனே முதல் நபராக ‘தமிழ்நாடு சோஷியலிஸ்ட்கட்சி’ என்று சொன்னார். அதைக் கேட்ட அண்ணாதுரை ‘நாம் புதியதாகக் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதில் திராவிடர் என்ற சொல் இருக்க வேண்டும். அது முக்கியம்’ என்றார்.

அடுத்ததாக திராவிட சோசலிஸ்ட்டுக் கழக, திராவிட சமதர்மக் கழகம், திராவிட தீவிரவாதிகள் கழகம் என வரிசையாகப் பல பெயர்கள் வந்து கொட்டின. அனைத்தையும் கையிலிருந்த அட்டையில் எழுதிக் கொள்ளப்பட்டது. அடுத்ததாக தமிழ்ப் பெயர்களைத் தாண்டி ஆங்கிலத்தில் சில பெயர்கள் முன்வைக்கப்பட்டது. Dravidian Forward Block, Dravidian Progressive Association, Dravidian vanguard Party எனப் பல பெயர்கள் சூட்டிக்காட்டப்பட்டன.

உடனே அங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அண்ணாதுரை, “Dravidian Progressive Federation என்றார். அதில் Dravidian என்ற சொல்லும் இருந்தது. Federation என்று வருகிறது. அதை அப்படியே தமிழில் எழுதிப் பார்ப்போம் என்று எழுதினார்கள். திராவிடர் முன்னேற்றக் கழகம் என வந்தது. உடனே அங்கே இருந்த அனைவரும் ரொம்ப நல்லா இருக்கு என்றனர். ஒருமித்த கருத்தாக அது ஒலித்தது.

அதிலும் சின்ன திருத்தம் செய்ய ஒரு யோசனையை வைத்தார் அண்ணாதுரை. Dravidian என்பதை திராவிடர் என்று எழுதலாமா? திராவிட என்று எழுதலாமா? என்று கேட்டார் அவர். திராவிடர் என்றால் குறுகிய வட்டமாக இருக்கும் என யோசித்த மதி, “நாம் எல்லோரும் சோஷியலிஸ்ட்டுகள். பகுத்தறிவுக் கொள்கைகளை யார் ஒத்துக்கொண்டாலும் நம் கட்சியில் இருக்கலாம். பெரியாருக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் வேண்டும். திராவிட என்பது நிலப்பகுதியைக் குறிக்கிறது. இதுவே பொருத்தமாக உள்ளது’ என்றார்.

அங்கே அமர்ந்து இருந்த இராம அரங்கண்ணல், தன் கையில் வைத்திருந்த அட்டையில் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று முதன்முதலாக எழுதிப்பார்த்தார். இந்தப் பெயரை ஆதரவாளர்களிடம் சொல்லி ஒரு முடிவு எடுப்போம். அதுவரை இதுவே கட்சி பெயர் என்று யாரும் முடிவு செய்துவிட வேண்டாம் என்றார் அண்ணா. அதன்பின்னர் ‘மாலை மணி’ பத்திரிகை ஆபீசில் உள்ள ஆதரவாளர்களிடம் இந்தப் பெயரைக் காட்டி ஒப்புதல் கேட்டார் அண்ணா. அதைப் பலரும் ஏற்றனர்.

ஆரம்பக் காலத்தில் திமுக என்ற தமிழ் வார்த்தையைச் சுருக்கு DPF என்றே எழுதி வந்தார்கள். அதாவது Dravidian Progressive Federation என்பதன் சுருக்கம். இது எப்படி DMK ஆனது என்பதுதான் சுவாரஸ்யம். திமுகவை எதிர்த்து எழுதி வந்த ‘தி இந்து’ பத்திரிகை தான். திமுக ஆரம்பக் காலத்தில் நடத்திய டால்மியாபுரம் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் என மும்முனைப் போராட்டங்களை நடத்தியது. அதைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து, திமுகவைச் சுருக்கு ஆங்கிலத்தில் டிஎம்கே என்று எழுதியது. அது அப்படியே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது” என்று எழுதி இருக்கிறார் அரங்கண்ணல்.

ஒரு காலத்தில் ஆங்கில பத்திரிகை DPF என அண்ணாதுரை கட்சிக்கு வைத்த பெயரை மாற்றி DMK என்று எழுதியதால் காலப் போக்கில் இதுவே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது. அதனால் கட்சிக்கு ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட Dravidian Progressive Federation என்ற வார்த்தையும் மறைந்துவிட்டது. தமிழில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று எழுதுவதை அப்படியே ஆங்கிலத்தில் Dravida Munnetra Kazhagam எழுத வேண்டிய நிலை உருவானது. அண்ணாதுரை தன் கட்சிக்குச் சூட்டிய பெயரையே மாற்றிய வரலாறு தி இந்து பத்திரிகைக்கே உண்டு.

Report