கேரள மாநிலத்தில் நடந்த உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சுகுணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி-2024, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, ஜிம்மி ஜார்ஜ் உள்விளையாட்டு அரங்கில் கடந்த, 4 முதல், 6ம் தேதி வரை நடந்தது. இதில், இந்தியா, வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூர் உட்பட, 9 நாடுகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில்இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இதில் பங்கேற்ற, கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பயிலும் துரைஆனந்த், 60-65 கிலோ, ஜூனியர் பிரிவில்(ஸ்டிக் பைட்) தங்கம் வென்றுள்ளார்.
அதேபோல், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி லியாஸ்ரீ, 40-44கிலோ, சப் ஜூனியர் பிரிவில்(ஸ்டிக் பைட்) தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இருவரையும் பள்ளியின் தலைமையாசிரியர்(பொ) சாந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயலட்சுமி மற்றும் சேகர் உள்ளிட்டோர் பாராட்டினர். சக மாணவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.