TRP raja

கோவையை உலகமே வியந்து பார்க்கப் போகுது.. அமைச்சர் டிஆர்பி ராஜா கொடுத்த அப்டேட்

உலக அளவில் கோவையை தொழில் மையமாக மாற்ற உள்ளோம். திறன் வளர்ச்சிக்கு நான் முதல்வன் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையம் அருகே செமிகண்டக்டர் தயாரிக்கும் தனியார் உற்பத்தி நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. இதில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறுகையில், தமிழக முதல்வர் அமெரிக்கா சுற்றுப் பயணத்தில் 7,513 கோடி ரூபாய் முதலீடு பெற்று வேலைவாய்ப்பை பெற்று வந்துள்ளார். அமெரிக்கா பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இந்த நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு விமர்சனங்களைத் திறந்த மனதுடன் அணுகும். சாலை தொடர்பாக உங்கள் குறை தீர்த்து வைக்கப்படும். எங்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் போல் திறன்வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற்றபோது கூட ஏன் 10 லட்சம் இல்லை என எதிர்க்கட்சியினர் சொன்னார்கள்.

உலக அளவில் கோவையை தொழில் மையமாக மாற்ற உள்ளோம். திறன் வளர்ச்சிக்கு நான் முதல்வன் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் அனுமதி ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு எல்லா வகையிலும் உதவ தயார். மின் வாகனங்கள், ஜவுளி ஆகிய தொழில்களுக்கு தமிழகம் முன்னணி மையமாக உள்ளது. நாட்டின் மின்னணு ஏற்றுமதி 33 சதவீதமாக உள்ளது. தமிழகம் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக மாறும். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா கொடியை ஏற்றி வையுங்கள். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தெரியவரும்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: YES நிறுவனம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே அமெரிக்காவில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக முதல்வரை சந்தித்தனர். தமிழகத்தில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் அவர்களிடம் கேட்டிருந்தார்கள். தற்போது 15 கோடி முதலீட்டில் இந்நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 150 கோடி முதலீட்டில் அடுத்த யூனிட்டை திறக்கவுள்ளனர்.

ஆறு மாதத்தில் எவ்வளவு வேகமாக நாம் வேலை பார்க்கிறோம் என்பதை இந்த நிறுவனத்தினர் பார்க்கின்றனர். இதன் மூலம் கோவை மிக விரைவில் செமிகண்டக்டர் தொடர்புள்ள நகரமாக மாறப்போகிறது. முதலீடு எதில் கொண்டு வருகிறோம், எப்படி கொண்டு வருகின்றோம் என்பது தான் முக்கியம். வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், நல்ல ஊதியத்துடன் இருக்கிறது. இதற்கு கோவை நகரம் சரியான இடமாக இருக்கிறது என்பதால் கோவையில் முதலீடு செய்கின்றனர்.

தமிழகத்தின் மீதும் கோவை மீதும் தொழில் முனைவோர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். முதல்வர் ஒரு முடிவை எடுத்தால் நிச்சயமாக அதை ஸ்கோர் செய்யாமல் விடமாட்டார். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி குறைவு குறித்த கேள்விக்கு, இந்த இடத்தில் மத்திய அரசை பற்றி பேசக் கூடாது. நீங்கள் எதிர்பார்க்கக் கூடியதை சொல்ல விருப்பமில்லை. ஒன்றிய அரசு இன்னும் கூடுதலாக உதவிகள் செய்ய வேண்டும்.

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உறுதி செய்யும் இடத்தில் முதல்வர் இருக்கிறார். சிறு சிறு தடைகள் எங்கு இருந்தாலும் அதை அவர் சரி செய்வார். மிகப் பிரமாண்டமான ஸ்டேடியம் கோவைக்கு வருவது உறுதி என்றார்.

Report