வாயையும் கையும் வைத்துக் கொண்டு சும்மா இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும். “நானும் ரவுடிதான், எவன் வந்தாலும் வெட்டுவேன்” என்று கூறி கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பு நின்றுகொண்டு மிரட்டல் வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
இன்றைக்கு ரீல்ஸ் மோகம் பலருக்கும் அதிகமாக விட்டது. எப்படியாவது ரீல்ஸ் மூலம் மற்றவர்கள் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக பலர் என்னென்னமோ செய்கிறார்கள். அப்படி ரீல்ஸ் எடுப்பதற்காக எக்குத்தப்பாக ஏதாவது செய்கிறார்கள்.. ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுப்பது, வாளில் கேக் வெட்டுவது, போலீஸையே மிரட்டுவது, போலீஸ் ஸ்டேசன் முன்பு , நீதிமன்றம் முன்பு ஆவேசமாக பேசி வீடியோ போடுவது, ரவுடி போல் போஸ் கொடுத்து வீடியோ போடுவது என கவனம் பெற பல்வேறு வகையான ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கிறார்கள். அப்படித்தான் கோவையைச் சேர்ந்த 2கே கிட்ஸ் இளைஞர் ஒருவரின் வீடியோ வெளியாகி உள்ளது.
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருடைய 22 வயது மகன் சந்தோஷ்குமார் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். இளைஞர் சந்தோஷ்குமாருக்கு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதில் ஆர்வம் அதிகம். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை இவர் அடிக்கடி பதிவிட்டு வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதத்துடன் கேக் வெட்டுவது போன்ற வீடியோவை பதிவிட்டு வந்துள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
இதனை கண்ட கோவை செல்வபுரம் போலீசார் சந்தோஷ்குமாரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, இனிமேல் இதுபோன்று வீடியோக்களை வெளியிடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்திருந்தார்கள். போலீஸ் எச்சரிக்கையை மீறி மீண்டும் சந்தோஷ்குமார் வெளியிட்ட வீடியோ அவருக்கு சிக்கல் ஆகி உள்ளது. அண்மையில் சந்தோஷ்குமார் செல்வபுரம் போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு, அங்குமிங்கும் சென்றபடி, “நானும் ரவுடிதான். எங்களை கேட்காமல் யாரும் செல்வபுரத்திற்குள் நுழைய முடியாது. எவன் வந்தாலும் காலை வெட்டுவோம்” என்று வீடியோ பதிவு செய்தாராம். தொடர்ந்து அவர் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தின் அறிவிப்பு பலகை முன்பாக சந்தோஷ்குமார் அங்கும் இங்கும், நடந்தபடி மிரட்டல் தொணியில் பதிவு செய்த வீடியோவை பார்த்து போலீசார் ஆடிப்போனார்கள். இதைத்தொடர்ந்து செல்வபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின்கீழ் சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர. தொடர்ந்து சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.