கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ளது. கோயிலின் அருகே திமுக முன்னாள் நிர்வாகி ஒருவரின் அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்தக் கட்டிடத்தை கோயில் மறைப்பதாக கூறி அதன் உரிமையாளர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும், திமுகவைச் சேர்ந்த காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் அவர்களும் கோவிலை இடிப்பது சம்பந்தமாக கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வனிதா, திமுக நகர்மன்ற உறுப்பினர் அனிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயில் முன்பு இன்று (அக்.,15) திரண்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க முன்வருவதை கண்டிக்கிறோம். கோயிலை தொட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை பொதுமக்கள் விடுத்துள்ளனர். பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோவில் இடிப்பதை நெடுஞ்சாலைத் துறை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.