கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி. இவரது மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தனது மகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பெயர் கொடுத்ததாகவும் தன் மகளைத் தவிர ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த யாரும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ளாத நிலையில் சுதந்திர தினத்தன்று நடத்த வேண்டிய போட்டியானது
முன்னதாகவே நடத்தப்பட்டதாகவும் அதில் பேச்சுப் போட்டியில் தனது
மகள் ஒருவர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், தலைமை ஆசிரியர் ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசையும் தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் அளித்ததாக குற்றம் சாட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.25) புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது தன்னையும் தன் மகளையும் இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தெரிவித்த இந்திராகாந்தி, ஜாதியின் அடிப்படையில் பரிசளித்தது வேதனை அளிப்பதாகவும் எனவே, தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.