கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தும் கால்வாய்கள் நிரம்பியும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த பாதிப்புகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து சரி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மழையால் பாதித்த பகுதிகளையும் மேற்கொள்ளும் பணிகளையும் மின்சார துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று (அக்டோபர்.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அதன்படி சிங்காநல்லூர் அருகே கதிரவன் கார்டன் பகுதியில் உள்ள வாய்காலில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் தங்களில் வீடுகள் இருக்கும் பகுதிக்கு வந்து ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அமைச்சர் அங்கு சென்று பார்வையிட்டார். அவரிடம் அப்பகுதி மக்கள் சாலைகளை அமைத்து தர வேண்டும் வாய்காலை முறையாக பராமரித்து அந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்கும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள அமைச்சர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.