வால்பாறை நகரில் அண்ணா சிலை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக செப்.23 இரவு 7.30 மணி அளவில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கருமலை எஸ்டேட்டில் இருந்து அரசுப் பேருந்து வந்தது. சாலையில் இடையூறாக கார் நிறுத்தப்பட்டிருந்ததால் பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். சிறிது நேரம் கழித்து காரில் வந்தவர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, ஏன் இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு மதுபோதையில் இருந்த அவர்கள் அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரை தகாத வார்த்தையில் பேசியதோடு அங்கிருந்த பெண் காவலரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், காரில் வந்த திருப்பூர் பாஜக மண்டல பொதுச் செயலாளர் முரளிதரன் (35), பாஜகவைச் சேர்ந்த துரைமுருகன் (36), வெங்கடேஷ் (25), அருண் (30), கோதண்டம் (46), சசிக்குமார் (42) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.