Annapoora Issue

புது பிரச்சினை.. அன்னபூர்ணா விவகாரத்தால் பாஜகவில் உட்கட்சி மோதல்! வீடியோ வெளியிட்ட கறுப்பு ஆடு யார்?

அன்னபூர்ணா ஹோட்டல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் பாஜகவை கடுமையான விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம் இந்தப் பிரச்னையில் பாஜகவின் உள்கட்சி சண்டை வெடித்துள்ளது. வீடியோவை வெளியிட்டது யார், நிர்வாகி நீக்கம், புகார் என்று கோவை பாஜகவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் மோதல் தொடர்கிறது.

கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மா சீதாராமன் முன்பு ஜிஎஸ்டி வரி குறித்து பேசியது தேசியளவில் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. இதனால் அன்னபூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். ரகசியமாக நடந்த இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவை பாஜகவினர் பரப்பினர்.

இது இந்தப் பிரச்னையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. தங்களது பிரச்னையை சொன்ன தொழிலதிபரை இப்படித்தான் மிரட்டுவதா என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, வீடியோவை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு, சீனிவாசனிடமும் பேசி சமாதானம் செய்தார். அன்னபூர்ணா நிறுவனமே இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து சென்றுவிட்டனர்.

ஆனால் பாஜகவில் பஞ்சாயத்து ஓயவில்லை. தொடர்ந்து இந்தப் பிரச்னை தொடர்பாக பாஜக கோவை சிங்காநல்லூர் மண்டல் தலைவர் சதீஷ் என்பவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கோவை பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் அறிவித்தார். அந்த வீடியோவை யார் பரப்பினார்கள் என்று சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் சதீஷை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில், “நான் 20 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் இருந்ததில்லை. அன்னபூர்ணா விவகாரத்தில் எங்கள் தலைவரே மன்னிப்பு கேட்குமளவுக்கு ஆகிவிட்டது. அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டது ரகசிய சந்திப்பாக தான் நடந்தது. இந்த சம்பவத்தின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன், வானதி சீனிவாசன், அன்னபூர்ணா ஹோட்டல் சீனிவாசன், பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகிய நான்கு பேர் தான் அங்கிருந்தனர்.

மற்ற மூன்று பேரும் வீடியோவில் இருக்கிறார்கள். மாவட்ட தலைவர் மட்டும் தான் வீடியோவில் இல்லை. அதனால் அவர் மூலம் ஏன் வீடியோ பரவியிருக்கக் கூடாது என்று எனக்கு ஒரு வாட்ஸப் பார்வேர்டு மெசேஜ் வந்தது. அது உண்மையான என சக நிர்வாகிகளுக்கு அனுப்பியதற்கு, கட்சி விரோத நடவடிக்கை என்று சொல்லி என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது கட்சி விரோத நடவடிக்கை என்றால், இந்த வீடியோவை பரப்பியவர் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார்களா.

நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே மாதிரி என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என மாநில தலைவர் வந்ததும் நிரூபிப்பேன். இந்த பிரச்னையில் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மாவட்ட தலைவர் தப்பிப்பதற்காக என்னை பலிகடா ஆக்கியுள்ளனர். இதுதொடர்பாக என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை.” என்றார்.

பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், “இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே மாநில தலைவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை யார் எடுத்தது, சமூகவலைதளங்களில் பரப்பியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது. அதுகுறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பியதால், சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி தலைமையில் இருந்து உத்தரவு வந்தது. அதனடிப்படையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது “என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவை பாஜகவினர் இடையே மோதல் உருவாகியுள்ளது. “தற்போது அமைப்பு ரீதியான பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. மேலும், ஒருவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலைவர் ஊரில் இல்லாத நேரமாக பார்த்து, கட்சிக்கும், அவருக்கும் தலைகுனிவு ஏற்படுத்தி வருகின்றனர். இதைப் பார்த்து நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்” என்று சதீஷ் தரப்பில் கூறுகின்றனர்.

சதீஷின் எதிர் தரப்பினர், “சதீஷ் கட்சியில் சேர்ந்தே 10 ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் 20 ஆண்டு என பொய் சொல்கிறார். கேசவ விநாயகம் உத்தரவின் பேரில் அவர் நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டால், இந்நேரம் அவர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கும். கட்சி காணாமல் போவதற்கு நீங்கள் தான் காரணம். இனியும் அவதூறு பரப்பினால் உங்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவோம்.” என்று கூறியுள்ளனர்.

Report