ராஜ்குமார் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அசத்தி வந்த நிலையில், இப்படம் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பு உணர்வை உமிழ்வதாக எஸ்டிபிஐ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வீதிகளில் போராட்டம் நடத்தினர்.
இளைஞர்கள் விரும்பக்கூடிய ஹாலிவுட் படங்களில் அமெரிக்கர்கள் ஹீரோவாக சித்தரித்து அவர்கள் தான் உலகத்தையே காப்பாற்றுவதாகவும், அமெரிக்காவை விட்டால் உலகை காப்பாற்ற இங்கு யாருமே இல்லை என்பது போல திரைப்படங்கள் வெளிவரும் இதே இந்திய சினிமாக்களை எடுத்துக்கொண்டால் ராணுவம், காவல்துறையினரை அளவுக்கு மீறி புகழ்ந்து அவர்கள் தான் நல்லவர்களாக சித்தரித்து சில படங்கள் வெளிவரும் அந்த வரிசையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படமும் முஸ்லீம்களின் விமர்சனத்திற்கு ஆளாயின.
இது குறித்து எஸ்டிபிஐ கட்சியினர் பேசியபோது “சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் முஸ்லிம்களை தேச விரோதிகள் என்ற ஓர் பிம்பத்தையை காட்சியப்படுத்தியது மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்கள் பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற எண்ணத்தை முன் நிறுத்தி உண்மைகளை மறைக்கும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் தான் அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தியாகமும் போற்றப்பட வேண்டியதாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரு மரணத்தை உணர்வுப் பூர்வமாக எடுக்கிறோம் என்கிற பெயரில், தொடர்ந்து முஸ்லீம் சமுதாயத்தை தீவிரவாதியாக சித்தரிப்பது என்பது வேதனையின் உச்சமாகும். திரைத்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய வெறுப்பை விதைக்கும் செயல்கள் ஏற்புடையதல்ல, கண்டனத்திற்குரியது.
இந்திய இராணுவத்தில் பணியாற்றி உயிர் இழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் திரைப்படமாக அமரன் பேசப்பட்டாலும் படத்தில் முஸ்லீம் மக்களை தீவிரவாதியாக காட்சியபடுத்திய விதம் சங்கபரிவாள் பஜ்ரங்தள் போன்ற மதவாத அமைப்புகளின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். அதிலும் பல தமிழ் படங்கள் காஷ்மீரின் பிரச்சினை முன் நிறுத்தி எடுக்கப்பட்டாலும் , காஷ்மீரிகள் அன்றாடம் படும் அவலங்களை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சமுதாயத்தை தவறாக காண்பித்து தான் படம் வெளியாகின்றன.
சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தால் காஷ்மீர் மக்கள் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள், இழிவு நிலைகள், துன்பங்கள் ஏராளம் என்பதை என்றைக்கும் மறுக்க முடியாது. இராணுவ படைகளால் அழைத்துச் செல்லப்பட்ட கணவன் இறந்துவிட்டானா ? இல்லையா? என்றுகூடத் தெரியாமல், பல பெண்மணிகளின் கண்ணீரும் அரை விதவைகளாக வாழும் காஷ்மீர் பெண்களின் அவலங்களின் நிலை தான் அங்கு அதிகம். ஆனால், காஷ்மீர் ஆண்கள் பயங்கரவாதிகளாக மாறி தங்களின் கொள்கையை மதித்து தங்களது மனைவிகளை விட்டு சென்றதால் தான் அங்குள்ள பெண்களில் அதிகமானோர் அரை விதவைகளாக இருப்பதற்கு காரணம் என்று திரைப்படம் காட்டியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் இது வடிகட்டிய பொய் பிரச்சாரமாகும்.
கடந்தாண்டு வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் முஸ்லீம் சமுதாயத்தை தீவிரவாதியாக காண்பித்தது மட்டுமல்லாமல் பல தவறான தகவல்களை பரப்பியது அதன் தொடர்ச்சியே தான் அமரன் திரைப்படம். தவறான எண்ணங்களை விதைத்த காஷ்மீர் ஃபைல்ஸ் எந்தளவிற்கு எதிர்க்கப்பட வேண்டிய படமோ, அதே அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படம்தான் அமரன் திரைப்படம். ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால், தேசபக்தியின் பெயரால் ஒரு சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டாவே அமரன் திரைப்படம் காட்சியளிக்கிறது அதேபோல் தேசபக்தி என்ற போர்வையில், முஸ்லீம்களை தேச விரோதிகளாக காட்சியப்படுத்திய விதம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் முஸ்லிம் வெறுப்பு உச்சத்தின் எச்சமாக உள்ளது அமரன் திரைப்படம்.
சங்பரிவாரத்தின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எப்போதுமே தமிழகம் எதிரானது. அதேபோல் இதுபோன்ற திரைப்படங்கள் வாயிலாக தமிழ் மண்ணிலும் நுணுக்கமாக வெறுப்பை பரப்பும் செயல் ஆபத்தானது. சிறந்த நடிப்பு என்பதை கடந்து, அந்த கதையும், நடிப்பும் உருவாக்கும் வெறுப்பு எனும் நுண்ணரசியலை கவனத்தில் கொள்ளாமல், காஷ்மீர் மக்களுடன் தமிழகம் எப்போதும் துணை நிற்பதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்த திரைப்படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல், பாராட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. முதல்வரின் பாராட்டு இந்த திரைப்படத்தின் விளம்பர தூதராக அவரை மாற்றியிருக்கிறது. வெறுப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அல்லது திணிக்கப்பட்டாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய தமிழக முதல்வரின் இந்த பாராட்டு, கலை வடிவில் தமிழக மண்ணில் வெறுப்பை விதைக்கும் ஊக்கியாக மாறிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பம் சார்ந்த நிறுவனம் ஒன்று இந்த திரைப்பட வர்த்தகத்தில் பங்கு கொண்டிருப்பதாலோ என்னவோ ஆரம்பத்திலேயே இந்த படத்தை பாராட்டி ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புக் குரல்களை அவர் மௌனியாக்கி விட்டார் என்றே தோன்றுகிறது. இது ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் இதுபோன்ற வெறுப்பை திணிக்கும் திரைப்படங்களுக்கு எதிராக தங்களது குரல்களை வலுவாக எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
அறிக்கையுடன் நின்றுவிடாமல், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அப்படத்தை தயாரித்த ராஜ்கமல் இண்டர்நேசனல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது ரஷீத், அஸ்கர் அலி மற்றும் சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக முற்றுகையில் ஈடுபட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். .