கோவை – பாலக்காடு சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியில் புதிய பாலம் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வேலை, தொழில் போன்றவற்றுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் அதிக அளவிலானோர் கோவை மாவட்டத்துக்கு கல்வி மற்றும் வேலைக்காக தினந்தோறும் சென்று, வருகின்றனர். கோவை – பாலக்காடு சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியைக் கடந்துதான் கோவை மாநகருக்குள் வர முடியும்.
இந்த சாலைப் பகுதியை அகலப்படுத்த வேண்டும், புதிய பாலம் கட்ட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மரப்பாலம் பகுதியில் புதிய பாலம் கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கோவை மக்கள் நீண்டகாலப் பிரச்னை தீர்க்கப்படவுள்ளது.
கோவை – பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ரயில் கீழ் பாலம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் மரத்தால் இப்பகுதியில் உள்ள பாலம் கட்டப்பட்டதால் மரப்பாலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மிகப் பழைமையான இந்தப் பாலம் 5.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதனால், இந்தப் பாலத்தின் வழியாக ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
கேரளத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு வரும் முக்கியச் சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த ரயில் கீழ் பாலத்தை இரு மாநிலங்களையும் சேர்ந்த கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கடந்து சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். எதிரில் வரும் வாகனம் காத்திருந்துதான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. அதன் பிறகு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. அப்போது, இந்தப் பாலம் சுருக்கிக் கட்டப்பட்டது.
கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இந்த மரப்பாலம் வழியாகத்தான் வந்தாக வேண்டும். எதிரெதிர் திசையில் காத்திருந்து மட்டுமே வாகனங்கள் செல்லும். தொடர்ந்து வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற வீக்கெண்டுகளில் கோவையில் இருந்து கேரளத்துக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதனால், கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். திருமலையம்பாளையம், எட்டிமடை, சாவடி, நவக்கரை போன்ற பகுதிகளில் கல்லூரிகளில் அதிக அளவில் உள்ளதால் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
காலை, மாலை நேரங்களில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இப்பகுதியில் செல்லும் ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி நெருக்கடியில் சிக்கித் தவிப்பது வழக்கமாக உள்ளது. இதனால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை பயன்படுத்தினால் கோவை மாநகருக்குள் உள்ள மருத்துவமனைக்கு குறைந்த நேரத்திலே சென்றுவிடலாம். ஆனால், இப்பகுதி போக்குவரத்துக்கு அச்சமடைந்தே பொதுமக்கள் பலரும் 4 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் மதுக்கரை மார்க்கெட் சாலைப் பகுதியை பயன்படுத்தும் நிலை உள்ளது.
மரப்பாலம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், மரப்பாலத்தில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதுள்ள மரப்பாலம் 5.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதனால், அதனை அகலப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதையடுத்து, 5.5 மீட்டர் அகலம் கொண்ட அந்தப் பாலத்தை இடித்துவிட்டு 9 மீட்டர் அகலத்தில் ஒரு பாலமும், அதற்கு அருகில் 9 மீட்டர் அகலத்தில் மற்றொரு பாலமும் கட்டப்படவுள்ளது.
9 மீட்டர் அகலப் பாலத்தில் 1.5 மீட்டர் அகலத்தில் நடைபாதையும் அமைக்கப்படும். இது 4 வழிப் பாதையாக அமையவுள்ளது. ரயில் கீழ் பாலம் கட்டப்படும்போது மேலே செல்லும் ரயிலை நிறுத்த முடியாது. வழக்கம்போல ரயில்கள் செல்லும். பாலம் கட்டப்படவுள்ள 9 மீட்டர் அகலத்திற்கு கான்கிரீட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டு, அதனை பாக்ஸ் புஸ்ஸிங் தொழில்நுட்பத்தில் பொருத்தப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, 4 வழிச்சாலை அமைப்பதற்கான நில ஆர்ஜிதப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
மரப்பாலம் பாலக்காடு ரயில்வே டிவிஷனின் கீழே வருவதால் அவர்களுடைய ஆலோசனை கேட்கப்பட்டு பாலப் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இதையடுத்து, மாற்றுப் பாதைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. திட்டச் செலவு குறித்து உறுதி செய்யப்படவில்லை. இப்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் மூலம் இரு மாநில மக்களின் நீண்டகாலப் பிரச்னையும் தீர்த்து வைக்கப்படவுள்ளது. இந்தச் செய்தி கோவை மக்களுக்கு நிம்மதி பெருமூச்சை அளித்துள்ளது.