coimbatore traffic law

கோவையில் போக்குவரத்து விதிமீறலுக்கு சட்டம் - ஒழுங்கு போலீஸாரும் அபராதம் விதிக்கலாம்: கோவை மாநகர காவல் ஆணையா் உத்தரவு

கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் நேற்று ஜன.21 அன்று கோவையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவா்களுக்கு போக்குவரத்து போலீஸாருடன், சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் அபராதம் விதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகரில் விபத்துகளைத் தடுக்க, கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். போக்குவரத்து போலீஸாா் பல்வேறு பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவா்களுக்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அத்துடன் ஒவ்வொரு சிக்னலிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் பதிவாகும் காட்சிகளை வைத்து விதிகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகரில் விபத்துகள் குறைந்து வருகிறது.

இந்தப் பணியில் போக்குவரத்து போலீஸாா் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணியாற்றி வரும் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இனிமேல் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. அவற்றைத் தடுக்க, போக்குவரத்து விதிகளை மீறுபவா்கள் மீது சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் நடவடிக்கை எடுக்க, தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் அபராதம் விதிக்கும் கருவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு உள்ளன. அந்த கருவிகள் மூலம் இனிமேல் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் அந்தந்தப் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிப்பாா்கள். இதனால் விபத்துகள் குறைவதுடன், குற்றச் சம்பவங்களும் தடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்