2019-ம் ஆண்டில் கோவை மேட்டுப்பாளையத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முயன்ற இருவரை கொன்ற ஆணவ கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (ஜனவரி 23) வழங்கப்பட்டது. இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கனகராஜின் சகோதரரான வினோத்குமார் (24) உட்பட நால்வர், கனகராஜ் மற்றும் அவருடைய காதலி வர்சினிப்பிரியாவை அரிவாளால் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கொலை குற்றவாளியான வினோத்குமாருடன் சேர்த்து, குற்றத்தை தூண்டியதாக கந்தவேல், சின்னராஜ், அய்யப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிபதி விவேகானந்தர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. வினோத்குமார் மீது மரண தண்டனை வழங்கப்படும் வாய்ப்புள்ளதென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை தொடர்பான வாதங்கள் 29 ஜனவரி 2025 அன்று நடைபெறும். மேலும், சிறைத்துறை நிர்வாகத்திடம் நீதிமன்றம் விளக்கங்களை கேட்டுள்ளது.
வினோத்குமார் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அதேசமயம், அரசு தரப்பால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தால், கந்தவேல், சின்னராஜ், அய்யப்பன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.