கோவையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் 5 நபர்களுக்கு தானம் செய்யப்பட்டது.
கோவை, பொள்ளாச்சி தாலுகா, நல்லூர் சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அரசு பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜனவரி 24 ஆம் தேதி மாலை செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் கடுமையாக காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி இன்று (ஜனவரி 27) உறுப்புகள் பெறப்பட்டன.
இதில், கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாகப் பெறப்பட்டது.
பின்னர் அவரது உடலுக்கு கல்லூரி முதல்வர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.