கோவை மத்திய சிறையில் 2,000-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தனித்தனியாக கட்டடங்கள் உள்ளன.
ஜனவரி 27 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் (33), திருப்பூரில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த இவர், மதியம் 12 மணி அளவில் தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் கழிவறைக்கு சென்று திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் திரும்பாததால், சிறைத் துறை அதிகாரிகள் சென்ற போது, அவர் கழுத்து எலும்பு முறிந்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் கழுத்து எலும்பு அழுத்தப்பட்டதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.