Bharatiar university

‘நோ கம்யூனிகேஷன்’; தாமதம் செய்யும் பாரதியார் பல்கலை: ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிக்கல்

கோவை : ‘கம்யூனிகேஷன்’ சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், மாணவர்கள் ஆராய்ச்சிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலையின் பல்வேறு துறைகளிலும், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலையால், அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், பகுதி நேரம் மற்றும் முழு நேரம் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.

ஆராய்ச்சிப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், நேர்காணல் மற்றும் பாரதியார் பல்கலை சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறும்.

ஆண்டுக்கு இரு முறை சேர்க்கை செயல்பாடுகள் நடைபெறும். இவ்வாறு, ஆராய்ச்சி படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, கம்யூனிகேஷன் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும், இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாணவர் ஆராய்ச்சி படிப்புகளை தொடர முடியும்.

ஆராய்ச்சி முடிந்து ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும் வரை, இந்த சான்றிதழ் இருப்பது அவசியம். இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே, ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சான்றிதழ், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பித்த போதும், சான்றிதழ் இல்லாததால், மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட முடியாமல் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, சான்றிதழை விரைந்து வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரூபா கூறுகையில், ”ஆராய்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுகின்றன. கம்யூனிகேஷன் சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை. இதுகுறித்து விசாரித்து அவ்வாறு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனில், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

தாமதத்துக்கு அனுபவம் இல்லாதது காரணம்

பல்கலை நிர்வாக அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘பல்கலையில், அனுபவமிக்க, திறன் மிக்க ஊழியர்கள் பலர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஓய்வு பெற்று வருகின்றனர்.

தற்போது பணியில் இருப்பவர்கள், அனைவரும் புதிதாக பொறுப் பேற்றுள்ளனர். தங்களது துறையில் போதிய அனுபவம் இல்லாததால், அனைத்து பணிகளிலும், காலதாமதம் ஏற்படுகிறது. நிர்வாகத்தில் உள்ள பல துறைகளின் தலைவர்களுக்கே அங்கு நடக்கும் பணிகள் குறித்து தற்போது தான் கற்று வருகின்றனர்.

இதனால், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் களை வேலை வாங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ் விச யங்களில் காலதாமதம் ஏற்படுகிறது,’ என்றார்.

புகார்செய்