கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பாக 76-வது குடியரசு தின விழா (ஜனவரி 26) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பேசிய சத்குரு அவர்கள், "பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரம் சாதாரண விஷயம் அல்ல. இனி இதுவே உலகத்தின் எதிர்காலம்" என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், "இந்த தேசத்தில் யார் அரசர், யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதில் மக்கள் கவலைப்படவில்லை. மக்கள் தான் எப்போதும் அதிகாரத்தில் இருந்தனர். இந்தியா எப்போதுமே ஜனநாயக நாடாக இருந்தது. யார் ஆட்சியில் இருந்தாலும் நம் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் மாறாமல் இருந்து வந்தது. இது இந்த தேசத்தின் தனித்துவமான அம்சமாகும்," என்று கூறினார்.
மேலும், "ஆன்மீக பாதையைத் தேடியவர்கள் உலகில் எப்போதுமே கிழக்கை நோக்கியே வந்துள்ளனர், அதாவது இந்தியாவை நோக்கி. ஒரு காலத்தில், இந்திய மக்கள் 30% ஆன்மீக பாதையைத் தேடி உள்முகமாக திரும்பியிருந்தனர். இன்றும் இது கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் தெளிவாகக் காணப்படுகிறது. மிகப்பெரிய மக்கள்தொகை, வேறு எந்த காரணத்திற்கும் இல்லாமல் உள்முகத்திற்காக அர்ப்பணிக்கின்றனர்," என்றார்.
ஹிந்து என்ற வார்த்தையின் சிறப்பை விளக்கி, "வடக்கில் ஹிமாலய மலைப்பகுதி, தெற்கில் இந்திய பெருங்கடல், அதாவது ஹிந்து சாகரம். இந்த இரண்டையும் இணைத்து இந்த நிலம் ஹிந்து என அழைக்கப்பட்டது. அதனால், இங்கு வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள் என அழைக்கப்பட்டனர்," என்றார்.
"ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தாலும் பத்து கடவுளர்கள் இருப்பார்கள். இந்த வேற்றுமைகள் ஒருபோதும் பிரச்சனையாக இல்லாமல் இருந்தது. உலகம் இதைப் பழகிக்கொள்கிறது. பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலகத்தின் எதிர்காலம். பலவிதங்களில் இந்தியா உலகிற்கு தலைமை வகிக்கிறது," என்றார்.
இந்நிகழ்வில் சூலூர் விமானப்படை நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதோடு ஈஷா ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள், சுற்றுப்புற பழங்குடியின மக்கள், உள்ளூர் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.