தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று ஜனவரி 20 அன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அமைச்சர் ஹோட்டலின் உணவகம், அறைகள் மற்றும் மதுபானக்கூடத்தை பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் மற்றும் தேவையான கூடுதல் வசதிகள் குறித்து விசாரித்தார்.
மேலும், மேலாளர் முரளிதரன் முறையாக பணிக்கு வரவில்லை என்றும் வருவாய் குறைவாக இருப்பது தெரிய வந்ததால், அவரை பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு ஹோட்டல் எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை மதிப்பீடு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், உணவகம் மற்றும் அறைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்ய முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.
இங்கு வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்ததாகவும் சில குறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாகவும் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல், அவுட்ஷோர்சிங் முறையில் பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கான மேலாண்மை முறையாக இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் வாடிக்கையாளர்களை மரியாதையாக கவனித்தல், சுவையான உணவுகளை வழங்கல் மற்றும் ஹோட்டலின் தூய்மையை பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நிரந்தர பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.