பைக் டாக்ஸி' நடைமுறையில், ஒருவரை மட்டும் ஓரிடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்கு ஏற்றிச் சென்று இறக்குவதற்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது பயணிகள் வாகனம் அல்லாத சொந்த வாகன பதிவெண்ணை கொண்டிருக்கிறது. இது போன்று ஏராளமான பைக் டாக்சிகள், கோவை நகரில் வலம் வரத்துவங்கிவிட்டன. வேலை வாய்ப்பில்லாத படித்த இளைஞர்கள் பலர், முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வாடகை ஆட்டோ, கால் டாக்சிகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
பைக் டாக்சி இயக்க தடை விதிக்கக்கோரி, கோவை சிவானந்தா காலனியில், கால்டாக்சி மற்றும் டூரிஸ்ட் டாக்ஸிகளை இயக்குபவர்கள், கோவை மாவட்ட ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஜன.22 ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 500க்கு மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர்.
டூரிஸ்ட் கார் டிரைவர்கள் கூறியதாவது: பைக் டாக்ஸி என்பது, மக்களுக்கு பாதுகாப்பற்ற பயணம். ஏதேனும் விபத்து ஏற்பட்டால், டிரைவர் மற்றும் பயணிப்பவர் என்று இரு தரப்பினருக்கும், காப்பீட்டுத்தொகை கிடைக்காது.
மிகக்குறைந்த கட்டணம் என, பலரும் பைக் டாக்சியை உபயோகித்து வரும் சூழலில், தற்போது அவர்களும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கூடுதலாக பணம் கேட்டு நிர்பந்திக்கின்றனர்.
லட்சக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று, வாகனங்களை வாங்கி பர்மிட் பெற்று, அவற்றை புதுப்பித்து டாக்சி ஓட்டுபவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னையில், அரசு தக்க தீர்வு தரவில்லை என்றால், எச்சூழலிலும் பர்மிட் புதுப்பிக்க மாட்டோம். பர்மிட்டுகளை திரும்ப ஒப்படைப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.