கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சுங்கம் பகுதியில் இயங்கி வந்த ஃபோகஸ் Edumatics என்ற ஐ.டி நிறுவனம் திடீரென முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது, இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிறுவனம் அமெரிக்க மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தும் சேவையில் ஈடுபட்டிருந்தது. இங்கு இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களும் உள்ளனர்.
திடீரென, நிறுவனம் மூடப்படுவதாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளது, ஆனால் எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஊழியர்கள் மூன்று மாதங்களாக பணி செய்யவில்லை என்று ஹெச் ஆர் ஒன் ஆப் மூலம் வருகை பதிவேடு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாத சம்பளங்கள் இதுவரை வழங்கப்படவில்லை, மேலும் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர்களுக்கு எந்தவித நலன்களும் வழங்கப்படவில்லை. தொழிலாளர் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து, ஃபோகஸ் Edumatics நிறுவனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (ஜனவரி 27) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு, உரிமைகளுக்காக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.