கோவையில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சுங்கம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட். என்ற நிறுவனத்தில், கோவையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் எடுக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்தது. இதில் 12 ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பணிபுரியும் ஊழியர்களும் உள்ளனர்.
இந்நிலையில், திடீரென்று கடந்த 25ம் தேதி ஒரே இமெயில் மூலம் கம்பெனி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளக்கம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுவனத்தை மூடியதைக் கண்டித்த பணியாளர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த நிலையில், போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட் இன்று (ஜனவரி 28) தனது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது. அதில், ஜனவரி மாத ஊதியத்தை வழங்குவதாகவும், பி.எப் தொகையை செலுத்துவதாகவும், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கிராஜுவிட்டி தொகை விடுவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.