கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி நேற்று ஜன.30 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓய்வூதியா்கள் தங்கள் குறைகள் தொடர்பாக ஓய்வூதிய தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் பூா்த்தி செய்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தற்போது வரை கிடைக்காமல் இருந்தால் அதைப்பற்றிய விவரங்கள், பணியாற்றிய அரசுத் துறை மற்றும் எந்த அலுவலா் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை ஓய்வூதிய தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் பூா்த்திசெய்து இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சியருக்கு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பிவைக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் பெயர், முகவரி, பி.பி.ஓ.எண், ஓய்வுபெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி, துறை, குறைகள் விவரம் மற்றும் இதுதொடர்பாக வழக்குகள் இருந்தால் அதன் விவரம், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம், அலுவலா் விவரம் உள்ளிட்டவற்றைப் பூா்த்தி செய்துத்தர வேண்டும்.
மேலும், ஓய்வூதியா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 28 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.