தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மையம், தாவர உயிரி தொழில்நுட்பவியல் துறையின் கீழ், பயிர் தாவரங்களில் மரபணு திருத்தம் குறித்த ஐந்து நாள் செயல்முறை பயிற்சியை நடத்துகிறது. இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 18 மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
பயிற்சி தொடங்கும் விழா ஜனவரி 27, 2025 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் முனைவர் ந.செந்தில் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் வி.பாலசுப்பிரமணி பங்கேற்றனர். தாவர உயிரி தொழில்நுட்பத் துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் இ.கோகிலாதேவி வரவேற்றார்.
இயக்குநர் முனைவர் ந. செந்தில் தனது தொடக்க உரையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் உலகெங்கிலும் செய்யப்படும் பயிர் மரபணு திருத்தப் பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். அவர் இந்த பயிற்சி திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் தாவரங்களில் மரபணு திருத்தத்தில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்படி பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்பதை எடுத்துரைத்தார்.
தாவர மரபணுவை வெட்டுவதிலும், திருத்துவதிலும், CRISPR கருவியின் பங்கு குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர், முனைவர் வி. பாலசுப்பிரமணி பேசினார். மேலும் இந்த பயிற்சி பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எல். அருள் நன்றியுரை வழங்கினார்.