வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள ஆழியாறு பகுதியில் யானைகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆழியாறு சமவெளி பகுதிக்கு அருகில் உள்ள நவமலை வனப் பகுதியில் இருந்து கூட்டமாக யானைகள் வரத் தொடங்கியுள்ளன.
இந்த யானைகள் வால்பாறை-பொள்ளாச்சி சாலைக்கு அடிக்கடி வந்து முகாமிடுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் கூட்டமாக சாலையில் நிற்கும் யானைகள் அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் நிற்கின்றன. சில நேரங்களில் வாகனங்களைத் துரத்திச் செல்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஒற்றை யானை பகல் நேரத்திலேயே சாலையோரம் நின்றுகொண்டு அவ்வழியாக வரும் வாகனங்களைத் துரத்தி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒற்றை யானை அங்கேயே நடமாடி வருவதால் வன ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ஆழியாறு பகுதியில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் நேற்று ஜன.22 எச்சரித்துள்ளனர்.