நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 71.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக அசத்தி வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள திரையுலகத்தில் நடிகராக இருந்தாலும், இவரின் திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். இவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் தெலுங்கு சினிமாவை மெய்சிலிர்க்க வைத்தது. அதிலும் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் வெளிப்படுத்திய காதலின் உணர்ச்சிகள் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது.
இப்படத்தில் இவர்களின் ஜோடி பொருத்தும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. இதன் பின்னர் அவர் நடித்த கிங் ஆப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் தான் லக்கி பாஸ்கர்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தீபாவளியன்று வெளிவந்த படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ‘கொல்லாதே’ பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் படம் வெளியான முதல் நாளிலே நல்ல ஓபனிங் கிடைத்ததால் தற்போது தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் 7 நாள்களில் உலகளவில் ரூ. 71.2 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.