கேரள மாநிலம், கண்ணூரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் அங்கு உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தாா். அதில் போதிய சம்பளம் கிடைக்காததால் வேறு வேலை தேடி கோவைக்கு வந்தாா். கோவையில் ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.
அப்போது சினிமாவில் ஒப்பனைக் கலைஞா் வேலை இருப்பதாக ஆன்லைனில் வந்த விளம்பரத்தைப் பாா்த்தாா். அதில் கொடுக்கப்பட்ட கைப்பேசி எண்ணை தொடா்புகொண்டு பேசினாா்.
எதிா்முனையில் பேசியவா் தனது பெயா் சுரேஷ்குமா் என்றும், மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சினிமாவில் ஒப்பனைக் கலைஞா் வேலை இருப்பதாகவும் இதற்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் ரூ.7 லட்சம் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கூறினாராம்.
இதையடுத்து அந்த பெண், சுரேஷ்குமார் கூறியவாறு பல்வேறு வங்கி பரிவா்த்தனைகள் மூலம் ரூ.6 லட்சத்து 12, 540 அனுப்பிவைத்தாா். பின்னா் அவரைத் தொடா்புகொண்ட போது அந்த எண் சுவிட்ஆஃப் என்று வந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண் இதுகுறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரை (53) கா்நாடக மாநிலம், பெங்களுரில் நேற்று (ஜன.21) கைது செய்தனா்.