கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஜன.21 நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கம், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் நிா்வாகிகள் மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோரிடம் ஒரு மனு அளித்தனா்.
அதில், கோவை மாநகரில் நன்னீா் நிரப்பும் சாத்தியக்கூறு உள்ள ஒரே ஒரு ஏரியாக மாநகர வடக்குப் பகுதியில் சின்ன வேடம்பட்டி ஏரி மட்டுமே உள்ளது. சுமாா் 235 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஏரிக்கு மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து தண்ணீா் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சின்ன வேடம்பட்டி ஏரிக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தோ்தல் பிரசாரத்தின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.
சின்னவேடம்பட்டி ஏரித் திட்டம் கோவை வடக்கு பகுதியில் மக்களுக்கு வெள்ள பாதிப்புகளை தவிா்த்திடவும், நிலத்தடி நீா் மேம்படவும் கொண்டு வரப்பட்டது. பேரிடா் புயல், பெருமழை பாதிப்புகளில் கணுவாய் முதல் சின்னவேடம்பட்டி, கணபதி, பீளமேடு வரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைக் காக்க வெள்ள வடிகாலாகவும், நீா்த்தேக்க ஏரியாகவும் சின்னவேடம்பட்டி ஏரி இருந்து வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக சின்ன வேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தேக்குவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. பல்வேறு அரசியல் அமைப்புகள், விவசாயிகள் சங்கத்தினா், பொதுமக்கள் என அனைவரும் தொடா்ந்து இந்த ஏரியில் நல்ல தண்ணீா் நிரப்ப தொடா்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீா் கலப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்